தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பாராமல் அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாகவே பார்க்க வேண்டும் என மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.
மக்களவையில் மலாய்க்காரர்- அல்லாத எம்பிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசன் கூறியது குறித்துக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர், என்ன கல்வித் தகுதி கொண்டவர் என்பதையெல்லாம் பார்க்கக் கூடாது, ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றாரவர்.
“எதற்காக அந்தத் தொகுதியில் இந்த மனிதரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது”. வீ இன்று கோலாலும்பூரில் மசீசவின் 70ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முகம்மட் வியாழக்கிழமை செமிஞ்யேயில் பிஎன்னுக்காக பரப்புரை செய்தபோது பக்கதான் ஹரப்பான் அரசாங்கத்தில் மலாய்க்காரர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.
“வீட்டுக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள் கொல்லைப்புறங்களில் குடிசையில் குந்திக் கொண்டிருக்கிறார்கள்.
“முன்பு நம் தேசியப் போராட்ட வீரர்களின் காலைப் பிடித்து தஞ்சமளிக்குமாறு கெஞ்சியவர்கள் இப்போது பெரிய பெரிய வீடுகளில் வசிக்கிறார்கள்”, என்றவர் கூறினார்.