செமினி இடைத்தேர்தல் | இன்று நடந்து முடிந்த வாக்கெடுப்பில், செமினி சட்டமன்றத் தொகுதி நாற்காலி மீண்டும் பிஎன் கைவசமானது.
பொதுத் தேர்தல் நிர்வாக அதிகாரி, முகமட் சாயுத்தி பாக்கார், பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹானாஃபியின் வெற்றியை, காஜாங் நகராண்மைக் கழக ஶ்ரீ செம்பாக்கா மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பிஎன்–இன் இந்த வெற்றி, கடந்த மே 9, பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நடந்த முதல் இடமாற்றம் ஆகும்.
இதற்கு முன்னர் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும், 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) வென்ற கட்சிகளே, மீண்டும் அவ்விடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஜிஇ14-கிற்குப் பிறகு நடந்த 6 இடைத்தேர்தல்களில், பிஎன் –னுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.
ஜக்காரிய 19,780 வாக்குகள் பெற்று, 1914 பெரும்பான்மை வாக்குகளில் செமினியை வென்றார்.
பிஎச் கூட்டணி வேட்பாளரான ஐமான் ஜைலானி, 17,866 வாக்குகள் பெற்றார்.
இம்முறை பிஎன் –னுக்கு, 50.44 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன, இது கடந்த பொதுத் தேர்தலைவிட (30.88%) அதிகம். இதற்கு முக்கியக் காரணம், பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு என்று கூறலாம்.
இதற்கிடையே, பி.எஸ்.எம். வேட்பாளர் நிக் அஸிஸ் அஃபிக் 847 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் குவான் ச்சீ ஹேங் 725 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் வைப்புத் தொகை பறிபோனது.
இதன்வழி, சிலாங்கூர் சட்டமன்றத்தில், தற்போது பிஎன் 5 நாற்காலிகளைக் கொண்டுள்ள வேளை, பிஎச்-இன் நாற்காலிகள் 50-ஆக குறைந்துள்ளன.