நேற்றைய இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் செமிஞ்யேயில் வெற்றிபெறத் தவறிவிட்டாலும் அத்தொகுதிக்கான மேம்பாட்டுப் பணிகள் தொடரும்.
செமிஞ்யேக்கான மேம்பாட்டுப் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு மாநில பட்ஜெட்டிலும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“அவை எல்லாம் இடைத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டவை அல்ல, மாநில பட்ஜெட்டில் ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ளவை.(தோல்வி என்பதற்காக) செமிஞ்யேயைப் பழி வாங்க மாட்டோம்”, என்றவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பக்கத்தான் ஹரப்பான், மத்தியிலும் மாநில அளவிலும் நிலைத்திருக்க வேண்டுமாயின் அதன் பல கொள்கைகளும் முடிவுகளும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை இடைத் தேர்தல் தோல்வி உணர்த்தியிருப்பதாகவும் மந்திரி புசார் கூறினார்.