பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நேற்றைய செமிஞ்யே இடைத்தேர்தலில் அம்னோ-பாஸ் ஒத்துழைப்புத்தான் பிஎன் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
“14வது பொதுத் தேர்தலில் (அச்சட்டமன்றத் தொகுதியில்) நாங்கள் வெற்றி பெற்றோம், அப்போது பாஸும் அம்னோவும் பிரிந்து கிடந்தன அதனால் அவற்றால் கூடுதல் வாக்குகள் பெற முடியவில்லை”, என மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.
இடைத் தேர்தலில் வேண்டுமானால் அம்னோவும் பாஸும் ஒத்துழைக்கலாம், பொதுத் தேர்தலில் ஒத்துழைத்தால் பாஸுக்கு அது கேடாக அமையும் என்றும் அவர் சொன்னார்.
“இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதோ தோல்வியுறுவதோ பெரிதல்ல.
“பொதுத் தேர்தலில் அவை ஒத்துழைக்க முடியாது. ஒதுழைத்தால் பாஸுக்கு எதுவும் கிடைக்காது போகும்”, என்றாரவர்.
நேற்றைய தேர்தலில் பிஎன் வேட்பாளர் சக்காரியா 19,780 வாக்குகள் பெற்று, 1914 பெரும்பான்மை வாக்குகளில் வென்றார்.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரான முகம்மட் அய்மான் சைனாலி 17,866 வாக்குகள் பெற்றார். பிஎஸ்எம்மின் நிக் அசிஸ் அபிக் அப்துலும் சுயேச்சை வேட்பாளர் குவான் சீ ஹெங்கும் முறையே 847, 725 வாக்குகளைப் பெற்றனர்