பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் கொன்ஸோர்டியம் செனித் பியுசிஜி(Consortium Zenith BUCG ) சென்.பெர்ஹாட்டுக்கு திறந்த டெண்டர் முறையில்தான் வழங்கப்பட்டது என்றும் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“திறந்த டெண்டர் முறையில் வழங்கப்பட்டது என்பதால் அதில் ஊழல் எப்படி நடந்திருக்கும்? அதன்மீது (எம்ஏசிசி) விசாரணை செய்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
“எல்லாம் முந்தைய அரசாங்கம் இருந்தபோது நடந்தது”, என்று முன்னாள் பினாங்கு முதல்வர் கூறினார்.
வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் அந்த ரிம6.3 பில்லியன் மதிப்புள்ள சுரங்கப் பாதைத் திட்டம்மீது எம்ஏசிசி-இன் விசாரணை அறிக்கைகள் என்று சில அறிக்கைகளை அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது லிம் அவ்வாறு கூறினார்.
லிம் உள்பட டிஏபி தலைவர்கள் பலர் செனித் நிறுவனத்திடமிருந்து கையூட்டு வாங்கியதை அந்த அறிக்கைகள் புலப்படுத்துவதாக அந்த வலைப்பதிவர் கூறியிருந்தார்.
ராஜா பெட்ராவை ஒரு பொய்யர் என்று வருணித்த லிம் அவர்மீது எம்ஏசிசி போலீசில் புகார் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அத்திட்டம் குறித்து பினாங்கு அரசு ஏற்கனவே விரிவாக விளக்கம் அளித்து விட்டது என்றும் அவர் சொன்னார்.