இன்வோக் மலேசியா ஆய்வு நிறுவனத்தின் பணியாளர்கள் இருவரும் அதன் முன்னாள் பணியாளர் ஒருவரும் 75 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக நேற்றிரவு செந்தூல் தாமான் முத்தியாராவில் ஒரு கொண்டோமினியத்தில் கைது செய்யப்பட்டனர்.
அக் கைது சம்பவத்தை உறுதிப்படுத்திய செந்தூல் போலீஸ் தலைவர் எஸ்.சண்முகமூர்த்தி சின்னையா, 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினரான அம்மூவரும் கஞ்சா வைத்திருப்பதாக துப்பு கிடைத்ததை அடுத்து நேற்றிரவு மணி 12.30 அளவில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
“இச்சம்பவம் 1952 ஆபத்தான போதைப் பொருள் சட்டம் பிரிவு 39ஏ(2)இன்கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 5ஆண்டுச் சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் கொடுக்க இச்சட்டம் வகை செய்கிறது” என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் இன்வோக் நிறுவனத்தின் வரைகலை வடிவமைப்பாளர், இன்னொருவர் அதன் விற்பனை நிர்வாகி, மூன்றாமவர் அதன் முன்னாள் ஊழியர் என்றும் சண்முகமூர்த்தி கூறினார்.
இன்வோக் நிறுவனம் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்குச் சொந்தமானது.
ரபிசி பின்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இன்வோக் வழக்குரைஞர்கள் போலீசிடம் தகவல் பெற முனைவதாகக் கூறினார். மேலும், வேலை நேரத்துக்கு அப்பால் பணியாளர்கள் ஈடுபடும் செயல்களுக்கு நிறுவனங்கள் பொறுப்பாக மாட்டா என்றாரவர்.
“வேலை நேரத்துக்கு அப்பால் அவர்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் சொந்த விவகாரம்.
“விசாரணை செய்வதையும் மேல் நடவடிக்கை எடுப்பதையும் அதிகாரிகளிடமே விட்டு விடுகிறேன்”, என்றவர் சொன்னார்.