செமினி இடைத்தேர்தலில் பிஎன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஸ் மற்றும் பிஎன் உறுப்புக்கட்சிகளைக், குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகப் ‘பயன்படுத்தி’க் கொள்வதை அம்னோ நிறுத்த வேண்டுமென்று, மஇகா மத்தியச் செயலவைக் கேட்டுக்கொண்டது.
மாறாக, தெளிவான முறையில், பாஸ் கட்சியுடன் இணைந்த ஒரு புதியக் கூட்டணியைப் பிஎன் அமைக்க வேண்டும், ‘தற்காலிக கிம்மிக்ஸ்’ (வித்தை) எல்லாம் கூடாது என பி புனிதன் கூறினார்.
“தற்போது, பாஸ் மற்றும் பிஎன்-ஐ, அம்னோ ‘பயன்படுத்தி’ கொள்வதாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு முறை இடைத்தேர்தல் வரும்போதும், பிஎன்-பாஸ் ஒத்துழைப்பு அவசியம் என அம்னோ அறிவிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
“ஆனால், இடைத்தேர்தலுக்குப் பிறகு, பிஎன் கூட்டணியில் இருந்து அம்னோ ‘ஒதுங்கிவிடும்’. அம்னோ மற்றும் பாஸ் மட்டும்தான் (என்னவோ) வென்றது போல.
“பாஸ், மசீச, மஇகா, அம்னோ இணைந்த ஒரு கூட்டணியை அமைப்பதில் என்ன தவறு?” என அவர் சொன்னார்.
மேலும், ஶ்ரீ செத்தியா மற்றும் கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரங்களின் போது, பாஸ் ஒத்துழைப்பு நல்கியதை, மசீசவும் மஇகாவும் கண்கூடாகக் கண்டு வந்துள்ளன என புனிதன் தெரிவித்தார்.
கேமரன் மலை இடைத்தேர்தலில், சி சிவராஜ் தனது தகுதியை இழக்கும் முன்னர், தனது ஆதரவைப் பாஸ் தெரிவித்துள்ளது என்றும் புனிதன் சொன்னார்.
“அந்த வியூகம்தான், இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் பிஎன் வெற்றிபெற உதவியது,” என்றார் அவர்.
அம்னோவைவிட, பாஸ் உண்மையான ‘அரசியல் பங்காளி’ என புனிதன் விவரித்தார். இருப்பினும், அம்னோ புதியதொரு கூட்டணியை உருவாக்க மறுப்பதால், பாஸ் இன்று, போகும் திசை அறியாமல் உள்ளது என அவர் சொன்னார்.
“கேமரன் மலையில் பிஎன்–னுடன் ஒத்துழைத்தப் பாஸ், டாக்டர் மகாதிருடன் கைக் குலுக்குவதையும் நாம் பார்த்தோம். இது போகும் திசை தெரியாத செயல்…..
“உண்மையில், பிஎன் வரலாற்றை இப்போது, மஇகா மற்றும் மசீச ஆகியவற்றாலே தீர்மானிக்க முடியும், அம்னோவினால் அல்ல. பாஸ்-உடன் ஒத்துழைப்பைத் தொடர விரும்பினால், ஒரு புதிய கூட்டணியை உருவாக்கலாம்.
“மஇகா தலைமைத்துவம் விரைவாகச் செயல்பட்டு, கட்சியின் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க வேண்டும். கட்சியின் பொருட்டு ஒரு முடிவெடுக்க, இன்னமும் வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பிஎன் தலைமைச் செயலாளர், நஸ்ரி அப்துல் அஸிஸ் வெளியிட்ட, ‘இனவாதம்’ கொண்டது எனக் கருதப்பட்ட ஓர் அறிக்கை தொடர்பில் புனிதன் கருத்துரைத்தார்.
“பிஎன் பங்காளி கட்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், இனவாதத்தைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிட்ட பிஎன் தலைமைச் செயலாளருக்கு எதிராக, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“பிஎன் தலைமைச் செயலாளரை நியமிப்பதில் கூட்டணி பங்காளி கட்சிகளுடன் ஒருமித்த கருத்து எங்கேயுள்ளது? பிஎன் –னின் பிற பங்காளி கட்சிகளுடன், இந்த நியமனம் பற்றி கலந்துரையாடப்பட்டதா?”
“மஇகா தலைமைத்துவம் உணர வேண்டும், பிஎன்’னில் நமது நிலை என்ன, நாம் செல்லும் திசை எது? நாம் சிந்திக்க வேண்டும்.
தலைமை நீதிபதி, தலைமை வழக்கறிஞர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளில், மலாய்க்காரர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டது மற்றும் தேசிய வகை பள்ளிகள் பற்றி நஸ்ரி வெளியிட்ட அறிக்கை தொடர்பில், புனிதன் இவ்வாறு கூறியுள்ளதாக நம்பப்படுகிறது.
செமினி இடைத்தேர்தலில், பிஎன் வெற்றியை வரவேற்ற போதிலும், பிஎன் கூட்டணியில் “தேசபக்தி” பற்றியப் புரிதல், அம்னோ தலைவர்களிடையே எவ்வாறு உள்ளது என்பது குறித்து புனிதன் கேள்வி எழுப்பினார்.
“அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு தற்காலிகமானது ஆகும். மஇகா மற்றும் மசீச, சுதந்திர நாட்டில் ‘தேச பக்தி’ அடிப்படையிலேயே அம்னோவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
“ஆனால், அம்னோ தலைவர்களிடையே, இந்தப் புரிந்துணர்வு குறைந்து வருவதை நான் காண்கிறேன்,” என்று அவர் கூறினார்.