சுரங்கப் பாதைத் திட்டத்தில் ஊழல் என்பது ராஜா பெட்ராவின் ‘கற்பனை’

பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் குத்தகைக்கு விடப்பட்டதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக மலேசியா டுடே இணையத்தளம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதை செனித் கட்டுமான குழுமம்( CZC) மறுக்கிறது.

அந்த இணையத்தளத்தை நடத்திவரும் ராஜா பெட்ரா கமருடின், பினாங்கு போக்குவரத்து பெருந் திட்டத்தின் ஒரு பகுதியான பினாங்குத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கும் கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் மீது “வெறுக்கத்தக்க பதிவுகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்” என்று CZC மூத்த செயல் இயக்குனர் ஜருல் அஹமட் சுல்கிப்ளி கூறினார்.

அக்குற்றச்சாட்டுகள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க நிறுவனம் திட்டமிடுகிறதா என்று வினவியதற்கு, “அது வீண் வேலை, அவரும் நாட்டில் இல்லை” என்றார்.

தன் நேரத்தையும் உழைப்பையும் சுரங்கப் பாதைத் திட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிக்கப் போவதாய் அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ராஜா பெட்ராவின் பதிவுகள் “வெறும் கற்பனை” என்று குறிப்பிட்ட அவர், நிறுவனம் மற்றும் பினாங்கு அரசு ஆகியவற்றின் பெயரைக் கெடுப்பதற்காகவே இட்டுக்கட்டப்பட்டவை அவை என்றார்.

“பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்கூட குற்றச்சாட்டு பொய் என்று கூறியுள்ளார்”, என்றாரவர்.