ரிம250 புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்: மஸ்லீ உறுதியளித்தார்

கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், முன்பு 1மலேசியா புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்ட (பிபி1எம்) த்தின்கீழ் ரிம250 ரொக்க உதவி வழங்கப்பட்டதுபோல் அடுத்த ஆண்டுவாக்கில் மீண்டும் வழங்கப்படும் என மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

இப்போது, உயர்க்கல்வி மாணவர் உதவித் திட்ட(பிபிபிடி)த்தின்கீழ் மாணவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. ஆனால், ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருப்பதால் இவ்வாண்டு இத்திட்டத்தின்கீழ் அரசாங்கத்தால் ரிம100 ரொக்கம் மட்டுமே கொடுக்க முடியும். யுனிவர்சிடி மலேசியா கிளந்தான்(யுஎம்கே) மாணவர்களிடையே பேசியபோது மஸ்லீ இதைத் தெரிவித்தார் என உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.

“நடப்பு நிதி நிலைமை காரணமாக உதவித் தொகையைக் குறைக்க வேண்டியதாயிற்று. .

“அதற்காக மன்னிக்க வேண்டும், ஆனால், அடுத்த ஆண்டில் முன்பு கொடுக்கப்பட்ட தொகையே மீண்டும் கொடுக்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்”, என்றார்.

யுஎம்கே மாணவர் ஒருவர் இப்போது பிபிபிடி திட்டத்தில் கொடுக்கப்படும் தொகையை முன்பு பிபி1எம் திட்டத்தில் கொடுக்கப்பட்ட தொகைக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்குப் பதிலளித்தபோது மஸ்லீ இவ்வாறு கூறினார்.

புதிய பிபிபிடி திட்டத்தின்கீழ் 1.2 மில்லியன் மாணவர்கள் பாடநூல் உதவித் தொகையாக ஆளுக்கு ரிம100 ரொக்கத்தைப் பெறுவார்கள் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இத் தொகை அடுத்த மாதம் கொடுக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்திட்டத்துக்காக புத்ரா ஜெயா ரிம120 மில்லியனை ஒதுக்கியுள்ளது.