ரந்தாவ் இடைத் தேர்தலில் ரெம்பாவ் பிகேஆர் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீராமைக் களமிறக்குவதா அல்லது வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாமா என்பதை பிகேஆர் உச்ச ஆட்சிக்குழு முடிவு செய்யும்.
அதை விவாதிக்க, உச்ச ஆட்சிக்குழு விரைவில் கூட்டம் நடத்தும் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
“அப்போது (14வது பொதுத் தேர்தலில்) ஸ்ரீராம்தான் எங்கள் வேட்பாளர். ஆனால் , அவர் வேட்பாளர் நியமன மையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவர் நீதிமன்றம் சென்று வழக்காடினார்.
“இதையெல்லாம் கூடிப் பேசுவோம். யாரைக் களமிறக்குவது என்று முடிவு செய்வோம்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
14வது பொதுத் தேர்தலில் ஸ்ரீராம் நுழைவு அனுமதி (பாஸ்) வைத்திருக்க வில்லை என்பதால் தேர்தல் அதிகாரி அவரை வேட்புமனு தாக்கல் மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் அம்னோ தலைவர் முகம்மட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பிப்ரவரி 18-இல் கூட்டரசு நீதிமன்றம் முகம்மட்டின் வெற்றி செல்லாது என அறிவித்து இடைத் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.