பிரதமர் விரைவில் மாற்றப்படுவது நல்லது: பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், செமிஞ்யே இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி அடைந்ததை அடுத்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் உடனடியாக பிரதமராக்கப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஆளும் கூட்டணிமீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அது அவசியம் என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன் கூறினார்.

“அன்வார் பிரதமராவதை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். அது ஹரப்பான்மீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த ஒரு தொடக்கமாக அமையும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹரப்பான் கடந்த சனிக்கிழமை இடைத் தேர்தலில் செமிஞ்யேயை பாரிசான் நேசனலிடம் பறிகொடுத்தது. 14வது பொதுத் தேர்தலில் வென்று 10 மாதங்கள்கூட ஆகவில்லை அந்த இடம் பறிபோய் விட்டது.

செமிஞ்யேக்கு முன்பு கேமரன் மலை இடைத் தேர்தலிலும் ஹரப்பான் தோல்வி கண்டது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அதுதான் அடுத்தடுத்து இரண்டு இடைத் தேர்தலில் அது தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்று குமரேசன் கூறினார்.