அம்னோ, பாஸ்-ஐ விட, அதிக ‘மலாய்’ ஆக மாறிவிடாதீர்கள், பிஎச்-க்கு ரோனி லியூ அறிவுறுத்து

சனிக்கிழமையன்று, செமினி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததன் காரணமாக, அதிக ‘மலாய்’ ஆக மாறிவிட வேண்டாம் என டிஏபி செயற்குழு உறுப்பினர், ரோனி லியு பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) நினைவூட்டினார்.

“செமினியில் தோல்வியுற்ற பயத்தில், சில பிஎச் தலைவர்கள், அதிக மலாய்க்காரர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள்.

“அம்னோ, பாஸ்-ஐ விட அதிக மலாய் முக்கியத்துவம் கொண்ட கட்சியாக, பிஎச்-ஐ மாற்ற அவர்கள் எண்ணலாம். ஒருவேளை பிஎச் அல்லது அதன் பங்காளித்துவக் கட்சிகள் அந்த வழியைப் பின்பற்ற எண்ணினால், அது மிகப் பெரிய தவறாக போய் முடியும்,” என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ரோனி லியு தெரிவித்துள்ளார்.

பன்முகத் தன்மைக் கொண்டிருந்ததாலேயே, கடந்த பொதுத் தேர்தலில் பிஎச் வெற்றி பெற்றது என லியு கூறினார்.

எனவே, செமினி தோல்வியை மட்டும் காரணமாகக் கொண்டு, பிஎன்-ஐ பின்பற்ற நினைப்பது பின் விளைவுகளைக் கொண்டுவரும், பல ஆண்டுகளாக போராடிவந்த அக்கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணாகவும் அது உள்ளது என்றார்.

செமினியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மலாய் மற்றும் பூமிபுத்ராக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இருப்பினும், தேவைகள் அடிப்படையில், செயற்பட்டியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று புத்ரா ஜெயாவுக்கு லியூ முன்மொழிந்தார்.