புதியக் கூட்டணி – மசீச , மஇகா யோசனை

பிஎன் -னிலிருந்து விலகி, புதிய கூட்டணி ஒன்றை அமைக்க மசீச மற்றும் மஇகா ஆராய்ந்து வருகிறது.

பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ், இனவாத உணர்வைத் தூண்டும் வகையில் வெளியிட்ட அறிக்கைக்கு, அம்னோ ‘அமைதி’ காத்து வருவதைத் தொடர்ந்து, இம்முடிவை அவ்விரு கட்சிகளும் எடுத்துள்ளன.

மசீச மற்றும் மஇகாவுக்கு வேறு வழியில்லை, ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’ எனும் அதன் அடிப்படை நோக்கத்தைக் கைவிடாமல் இருக்க, புதியக் கூட்டணியை அமைப்பதுதான் சிறந்த வழி,” என இன்று, அவ்விரு கட்சிகளும் இணைந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளன.

அவ்வறிக்கையில் கையெழுத்திட்ட மசீச தலைவர் வீ கா சியோங் மற்றும் மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இருவரும், தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

பிஎன்–னின் அடிப்படை புரிந்துணர்வுக்கு இப்போது மரியாதை இல்லாமல் போய்விட்டது

“பிஎன் அதன் உண்மையான ஆற்றலையும் நோக்கத்தையும் மீண்டும் பெற வேண்டுமானால், அக்கூட்டணி கலைக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட வேண்டுமென மசீச மற்றும் மஇகா முன்மொழிகிறது,” என்று பிஎன்-னிலிருந்து வெளியேறப் போவதாக, நேரடியாக அறிவிக்காமல் அவர்கள் கூறினர்.

மசீச மற்றும் மஇகாவின் பேச்சுவார்த்தைப் பற்றி தெரிந்த மூத்தத் தலைவர் ஒருவர், பிஎன்-னில் இருந்து அம்னோவை நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அண்மையில், சீன, தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட வேண்டுமென நஸ்ரி வெளியிட்ட அறிக்கையின் விளைவாக, மசீசவுக்கும் அம்னோ தலைவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. ஆனால், அது தொடர்பாக மஇகா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை, செமினி இடைத்தேர்தல் வெற்றியை மேடையில் கொண்டாடிய தலைவர்கள் வரிசையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் எம் சரவணனனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.