அம்னோ இளைஞர் பிரிவு, பாரிசான் நேசனலின் மூன்று உறுப்புக் கட்சிகளில் மற்ற இரண்டுமான மசீசவும் மஇகாவும் புதிய கூட்டணி அமைப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாமென்று கேட்டுக் கொண்டிருக்கிறது.
அவ்விரண்டு கட்சிகளும் கட்சிநலனை விட மக்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அஷிரப் வாஜாடி குசுக்கி கூறினார்.
“மசீசவும் மஇகாவும் ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ முடிவெடுத்து விடக்கூடாது என்று அம்னோ இளைஞர்கள் மற்றும் பின் இளைஞர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்….. கலந்துபேசுவதே மேலானது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கூட்டணியின் தலைவிதியைத் தீர்மானிக்க பிஎன் உச்சமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டும்படி மசீசவும் ம இகாவும் நேற்று கூட்டறிக்கை விடுத்திருப்பது குறித்துக் கருத்துரைக்கையில் அஷிரப் அவ்வாறு கூறினார்.
அக்கூட்டறிக்கையில், பிஎன் கூட்டணியில் மூன்று கட்சிகளுக்குமிடையில் ஒற்றுமை இல்லை என்பதால் புதிய கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் இருப்பதாக மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங்கும் மஇகா தலைவர் விக்னேஸ்வரனும் கூறியிருந்தனர்.
மேலும், செமிஞ்யே இடைத் தேர்தலில் அரசியல் பரப்புரை ஆற்றிய பிஎன் தலைமைச் செயலாளர் முகம்மட் நஸ்ரி அசிஸ் தெரிவித்த இனவாத கருத்துகள் பிஎன்னின் மூன்று நிறுவனக் கட்சிகளின் உறவைக் கடுமையாக பாதித்து விட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முகம்மட் நஸ்ரி பிஎன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டப்படி தவறு என்று கூறிய அவர்கள், அவரைத் தலைமைச் செயலாளராக ஏற்றுக்கொள்ள மசீசவும் மஇகாவும் தயாராக இல்லை என்றும் சொன்னார்கள்.