பிஎன் –னின் உறுப்புக்கட்சிகளான மசீச மற்றும் மஇகா இரண்டும், அக்கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தில் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், தாங்கள் அக்கூட்டத்தைப் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளன.
மசீச மற்றும் மஇகா உயர் தலைவர்களால், இன்று வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், பிஎன் தலைமைச் செயலாளராக நஸ்ரி நியமிக்கப்பட்டது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில், நஸ்ரி கலந்துகொள்ளக்கூடாது என அவ்விரு கட்சிகளும், பிஎன் செயலகத்திடம் தெரிவித்துள்ளன.
அவ்வறிக்கையில் மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங் மற்றும் மஇகா தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
நஸ்ரி கலந்து கொண்டால் சட்டரீதியான சர்ச்சை எழலாம், அதனால் கூட்டம் செல்லுபடியாகாமல் போகலாம், அதனைத் தவிர்ப்பதற்கே இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என அவர்கள் கூறியுள்ளனர்.
பி.என். அரசியலமைப்பு சட்டம், பிரிவு 8.3 (டி) படி, உச்சமன்ற உறுப்பினர்களுடன் தலைவர் ஆலோசனை நடத்தி, தலைமைச் செயலாலரை நியமிக்க வேண்டும். அந்நபர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருப்பதோடு, பிஎன் நிர்வாகத்திற்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.
“2018, அக்டோபர் 27-ம் தேதி, புத்ரா உலக வர்த்தக மையத்தில், மஇகா தேசிய மாநாட்டைத் துவக்கிவைத்த போது, பிஎன் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, நஸ்ரியின் நியமனம் பற்றி அறிவித்திருந்தாலும், பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் அதுபற்றி ஒருபோதும் கலந்துரையாடப்படவில்லை அல்லது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை,” என வீ மற்றும் விக்னேஸ்வரன் இருவரும் தெரிவித்தார்.
“பிஎன் –னின் தலைமைச் செயலாளர் என்ற பதவியைக் கூறி, அறிக்கை வெளியிடும் தகுதி நஸ்ரிக்கு இல்லை என மசீசவும் மஇகாவும் வலியுறுத்த விரும்புகின்றன.
“பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் நஸ்ரி பிடிவாதமாக கலந்துகொண்டால், அக்கூட்டம் செல்லுபடியாகாமல் போக வாய்ப்புண்டு,” எனவும் அவர்கள் கூறினர்.