பாஸ், அம்னோ கூட்டுச் சேர்வது பேராக்கிலும் கெடாவிலும் ஹரப்பானுக்கு ஆபத்து

பாஸும் அம்னோவும் முறையாக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் பேராக்கிலும் கெடாவிலும் பக்கத்தான் ஹரப்பானின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கும்.

பேராக், பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடின், அம்னோவும் பாஸும் சேர்ந்து சட்டமன்றத்தில் 30 இடங்களை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஹரப்பானுக்கு 29 இடங்கள்தான்.

கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ 27 இடங்களையும் பாஸ் மூன்று இடங்களையும் பிடித்தன.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் சைனோல் பாட்சி பஹாருடின்(சுங்கை மானிக்), நோலி அஷிலின் முகம்மட் ரட்சி( துவாலாங் செக்கா) ஆகிய இருவரும் ஹரப்பான் மந்திரி புசார் அஹ்மட் பைசல் அஸுமுவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.

ஆதரவுதான் ஹரப்பானுக்கு ஆனால் இருவரும் கட்சிமாறப் போவதாகக் கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவ்விரு சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி விலகவில்லை என்றால், சட்டமன்றத்தில் பாஸ்-அம்னோ கூட்டணிதான் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருக்கும் என்றும் அக்மால் கூறினார்.

இதனிடையே, கெடாவில் பாஸுக்கு 15 இடங்கள், அம்னோவுக்கு 3இடங்கள். ஹரப்பான் கட்சிகளில் பெர்சத்து 5 இடங்களையும் பிகேஆர் 8 இடங்களையும் அமனா 3 இடங்களையும் டிஏபி 2 இடங்களையும் வைத்துள்ளன.

அம்னோவும் பாஸும் கூட்டணி அமைத்தால் இரு தரப்பும் சட்டமன்றத்தில் தலா 18 இடங்களை வைத்திருக்கும். இது சட்டமன்றத்தில் ஓர் இழுபறி நிலையை உண்டாக்கும்.

கடந்த பொதுத் தேர்தலில் ஹரப்பான் கெடாவை வென்றது.