புதிய கூட்டணியால் பேராக்கில் ஆட்சி கவிழும் என்று பாஸ் கூறுவது தவறு

அம்னோவும் இஸ்லாமியக் கட்சியும் கூட்டுச் சேர்ந்தால் பேராக்கில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி ஆட்டம் காணும் என்ற பேராக் பாஸ் இளைஞர் தலைவர் அக்மால் கமருடினின் கணிப்பு தப்பு.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் சட்டமன்றத்தில் அம்னோ 27 இடங்களையும் பாஸ் மூன்று இடங்களையும் ஆக மொத்தம் 30 இடங்களை வைத்திருந்தது உண்மைதான். ஆனால், அதன் பிறகு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து விலகி விட்டனர்.

சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினர் சைனோல் பாட்சி பஹாருடின் பெர்சத்துவில் சேர்ந்தார், நோலி அஷிலின் முகம்மட் ராட்சி சுயேச்சை உறுப்பினராக உள்ளார். இப்போது என்னவாயிற்று?. அம்னோ-பாஸ் இடங்கள் 28ஆகக் குறைந்து விட்டன.

அவ்விருவரும் அம்னோவில் இருந்திருந்தால் புதிய கூட்டணி சட்டமன்றத்தில் ஹரப்பானைவிட ஓரு இடத்தைக் கூடுதலாக பெற்றிருக்கும் என அக்மால் நேற்று உத்துசான் மலேசியாவிடம் கூறியிருந்தார்.

இதனிடையே, கெடாவில் அம்னோ-பாஸுக்கு 18 இடங்கள், ஹரப்பானுக்கும் 18 இடங்கள்.

அங்கு ஒரு இழுபறி ஏற்பட்டால் அவைத் தலைவர் அஹ்மட் காசிம்- ஒரு பிகேஆர் உறுப்பினர்- அவருக்குள்ள வாக்குரிமைப் பயன்படுத்திச் சிக்கலுக்கு முடிவு காணலாம்.

ஒரு வேடிக்கை: கடந்த ஜூலையில் அஹமட் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது நியமனத்தை ஆதரித்தனர். அதாவது அரசாங்கம் நியமனம் செய்த ஒருவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுபினர்களும் ஆதரித்துள்ளனர்.