பிஎன் உச்சமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது ஆனால், பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசிஸ் அதில் கலந்துகொள்ள மாட்டார்.
நஸ்ரி கலந்துகொள்ளும் கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மசீசவும் மஇகா எச்சரித்ததை அடுத்து நஸ்ரி கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறார்.
“நான் வரக்கூடாது என்று அவர்கள் தடை விதித்தால் நான் போகப் போவதில்லை, கூட்டம் நடக்கட்டும்”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
திங்கள்கிழமை மசீச தலைவர் வீ கா சியோங்கும் மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனும், ஒரு கூட்டறிக்கையில் நஸ்ரி பிஎன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லாது என்று தாங்கள் கருதுவதாக கூறியிருந்தனர். அதற்கு உச்சமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லையாம்
“நஸ்ரி பிஎன் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பிஎன் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி 2018, அக்டோபர் 27-இல் மஇகா ஆண்டுக் கூட்டத்தில் குறிப்பிட்டார் என்றாலும், அது குறித்து உச்சமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை”, என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நஸ்ரி அப்பதவியிலிருந்து விலகத் தயாராக இல்லை. ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டால் மட்டுமே அவர் பதவி விலகுவாராம்