எதிர்வரும் ஏப்ரல் 13-ம் தேதி, ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் (இசி) முடிவெடுத்துள்ளது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதியும், ஆரம்ப வாக்களிப்பு ஏப்ரல் 9-ம் தேதியும் நடைபெறும் என இசி தலைவர் அஸார் அஸிசான் ஹருண் தெரிவித்தார்.
ரந்தாவ் இடைத்தேர்தலுக்கு, RM1.8 மில்லியன் செலவாகும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். அதேவேளையில், 14-வது பொதுத் தேர்தலுக்குப் (ஜிஇ14) பின்னர் நடைபெறும் 7 இடைத்தேர்தல்களின் (ரந்தாவ் உட்பட) மொத்தச் செலவு RM15.348 மில்லியன் என்றும் அவர் கூறினார்.
“மொத்தம் 20,926 பேர் வாக்காளர்களாகப் பதிந்துள்ளனர், அவரிகளில் 118 பேர் ஆரம்பக் கட்ட வாக்காளர்கள், நால்வர் வெளிநாட்டில் வசிக்கின்றனர்,” என்று, இன்று புத்ராஜெயாவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
ஜிஇ14-ற்குப் பின்னர், ரந்தாவ்வில் நடக்கும் இடைத்தேர்தல் 7-வது இடைத்தேர்தல் ஆகும். முன்னதாக, சுங்கை கண்டீஸ் சட்டமன்றம் (ஆகஸ்ட் 4), பாலாகோங் சட்டமன்றம் (செப்டம்பர் 8), போர்ட்டிக்சன் நாடாளுமன்றம் (அக்டோபர் 13), கேமரன் மலை நாடாளுமன்றம் (ஜனவரி 26) மற்றும் செமினி சட்டமன்றம் (மார்ச் 2) என மொத்தம் 6 இடைத்தேர்தல்கள் நடந்துவிட்டன.
ஜிஇ14-ன் போது, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் எஸ் ஶ்ரீராம், இசி வழங்கிய தேர்தல் அடையாள அட்டையை (பாஸ்), உடன்கொண்டுவரத் தவறியதால், பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் முகமட் ஹசான் போட்டியின்றி தேர்வு பெற்றார்.