பத்துமலை கோயில் அதிகாரிகளில் ஒருவர் விடுதலை, இருவருக்கு காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜாலான் பண்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஒரு நில மேம்பாடு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 3 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

கோயிலின் உயர் நிர்வாக உறுப்பினரான, ‘தான் ஶ்ரீ’ பட்டம் வைத்திருக்கும் 75 வயது கொண்ட அந்நபரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவாதத்தின் பேரில், மாஜிஸ்திரேட் நோர்ஐஷா முகமட் யூசோஃப் விடுதலை செய்தார்.

இருப்பினும், அந்தத் ‘தான் ஶ்ரீ’யின் மகன் உட்பட இருவரை, நாளை வரை, 2 நாள்களுக்குக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

அவர்கள் மூவரும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், 3 நாள்களாக, எம்ஏசிசியால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

‘தான் ஶ்ரீ’யின் வீடு மற்றும் பத்துமலை கோயில் அலுவலகம் இரண்டையும் சோதனையிட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை மாலையில் எம்ஏசிசி அம்மூவரையும் கைது செய்தது. 45-லிருந்து 75 வயது வரையிலான அம்மூவரும் கோயில் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் என எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு, சென்ஷன் 16(a)(A) எம்ஏசிசி சட்டம் 2009 கீழ், இலஞ்சம் கேட்டது மற்றும் வாங்கியது அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது.