மலேசியா, இரண்டு மிகப் பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதாக இருந்தால் “அடுத்து என்ன செய்யும் என்பதை முன்னறிய முடியாத” அமெரிக்காவைவிட “பணக்கார” சீனாவைத் தேர்வு செய்யும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறு கூறிய மகாதிர், அது “முற்றிலும் பொருளாதார அடிப்படையில் எடுக்கப்பட்ட” முடிவு என்பதையும் தெளிவு படுத்தினார்.
“அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பார்க்கையில் அது அடுத்து என்ன செய்யும் என்பதை ஊகிக்க முடியவில்லை.
“சீனாவோ எங்களுக்கு அருகில் உள்ளது. பெரிய சந்தையைக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் சீனாவின் வளத்தில் நாங்களும் நன்மைபெற விழைகிறோம்.
“எனவே, இப்போதைய நிலையில் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் சீனாவே எங்கள் தேர்வு. அரசியல் ரீதியில் என்றால் அங்கு எதையும் தன் விருப்பப்படிச் செய்யும் யதேச்சாதிகார அரசு, அது எங்களைக் கவரவில்லை”, என்று மகாதிர் கூறினார்.
சீனாவைப் பற்றி மேலைநாடுகள் பரப்பும் பீதியுண்டாக்கும் வதந்திகளை புத்ரா ஜெயா நம்பத் தயாராக இல்லை என்றும் டாக்டர் மகாதிர் கூறினார்.
மலேசியா சுயமாக சிந்தித்து எந்த முடிவையும் எடுக்கும்.
“2,000 ஆண்டுகளாக சீனா எங்களின் அண்டை நாடாக இருந்து வருகிறது. அது எங்கள்மீது படையெடுத்ததில்லை. ஆனால், ஐரோப்பியர்கள் 1509-இல் வந்தார்கள். இரண்டே ஆண்டுகளில் நாட்டைப் பிடித்தார்கள்”, என்றாரவர்.