தாமான் மங்கீஸ் குடியிருப்பாளர்கள், டாக்டர் எம்-ன் அரசியல் செயலாளரை வழி மறித்தனர்

பினாங்கு, தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்பு திட்டத்தின் (பிபிஆர்) குடியிருப்பாளர்கள் டாக்டர் மகாதிரின் அரசியல் செயலாளர், அபு பாக்கார் யாஹ்யாவை, கொம்தார் கட்டடத்திலிருந்து வெளியேறவிடாமல், வழிமறித்து நின்றனர்.

அண்மையில் தங்கள் வாடகைக் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அம்மக்களைக் காண, அபு பாக்கார் நேற்றிரவு மணி 7 அளவில், அவர்கள் கூடியிருந்த கொம்தார் கட்டடத்திற்கு வருகையளித்தார்.

அவரின் விளக்கத்தில் திருப்தியடையாத குடியிருப்பாளர்கள், சுமார் 20 நிமிடங்கள் அபு பாக்காரின் காரை வழிமறித்து நின்றனர். பிறகு, ஒரு சில அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

அபு பாக்காருடன் வந்த, பினாங்கு பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர், ஷமீர் சுலைமானும் காவல்துறையினரின் பாதுகாப்புடனேயே அங்கிருந்து வெளியேறினார்.

அதன்பிறகு, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அபு பாக்கார், குடியிருப்பாளர்களின் பிரச்சனைகளை, நேரடியாகக் கேட்டறிய தன்னை அங்குச் செல்லுமாறு பிரதமர் மகாதிர் பணித்ததாகத் தெரிவித்தார்.

மாநில வீடமைப்பு துறை, சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட, அம்மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாவும் அவர் சொன்னார்.

பொறுப்பற்ற தரப்பினரால் பரப்பப்படும், பொய்யான செய்திகளை எளிதில் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, பினாங்கு முதலமைச்சர் சொவ் கோன் இயோ, தாமான் மங்கீஸ் குடியிருப்பாளர்கள் சில விதிமுறைகளை மீறியதால், அவர்களை அக்குடியிருப்புப் பகுதியைக் காலி செய்ய உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.

5 வருடங்கள் மட்டுமே அங்கு வசிக்க முடியும் எனும் நிபந்தணைக்கு முரணாக, அவர்களில் சிலர் 11 வருடங்களாக அங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது.

அவர்களைவிட தகுதியான, வேறுசிலருக்கு அவ்வீடுகளைக் கொடுக்கவே, நோட்டிஸ் வழங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.

-பெர்னாமா