“கூட்டரசு சாலைகளில் பராமரிப்பு வேலைகள் தேங்கிக் கிடப்பதற்கு நிதிப் பற்றாக்குறைதான் காரணம்’

நாட்டில் கூட்டரசு சாலைகள் சிலவற்றில் பராமரிப்பு வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன என்றால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததுதான் அதற்குக் காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார்.

2019 பட்ஜெட்டில் நாடு முழுக்க கூட்டரசு சாலைப் பராமரிப்புக்கு ரிம100 மில்லியனே ஒதுக்கப்பட்டதால் சாலைப் பராமரிப்பு வேலைகளைச் சரியாகச் செய்ய முடியாது போயிற்று.

சாலைப் பராமரிப்புக்கு ஆண்டுக்கு ரிம2 பில்லியன் தேவைப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

“2015-இலிருந்து (சாலைப் பராமரிப்புக்கு) அமைச்சுக்கு ரிம600 மில்லியனிலிருந்து ரிம800 மில்லியன்வரைதான் கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு அது ரிம100 மில்லியனாகக் குறைக்கப்பட்டது”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் ரிம1 ட்ரில்லியன் கடனைக் கட்டுவதற்காக அரசாங்கம் பல்வேறு அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்து விட்டது.

பொதுப் பணி அமைச்சு சாலைப் பராமரிப்பு வேலைகளைச் செய்து முடிக்க நிதி அமைச்சிடம் ரிம610 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கேட்டுள்ளது என்றும் கேட்டது கிடைக்கும் என்று தகவல் கிடைத்திருப்பதாகவும் பாரு பியான் கூறினார்.