பிஎன்-ஐ கலைக்க, தலைவர்களிடையே கருத்து ஒப்புதல் ஏதும் இல்லை

கடந்தாண்டு பொதுத் தேர்தலில் தோல்வி கண்டதை அடுத்து, அக்கூட்டணியைக் கலைக்கலாமா என்பது தொடர்பாக நடைபெற்ற பிஎன் உச்சமன்ற முதல் கூட்டம், எந்தவித உடன்பாடும் இல்லாமல் முடிவுற்றது.

இன்று காலை, சுமார் 11 மணியளவில், புத்ரா உலக வாணிப மையத்தில் அமைந்துள்ள பிஎன் தலைமையகத்தில் கூட்டம் தொடங்கியது.

பிஎன் துணைத் தலைவர், முகமட் ஹசான் தலைமையேற்ற அக்கூட்டத்தில், அம்னோ, மஇகா மற்றும் மசீச உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அம்னோ சார்பில் அதன் உதவித் தலைவர்கள் மஹ்ட்சீர் காலிட் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்ராஃப், மகளிர் தலைவி நொராய்னி அஹ்மாட் ஆகியோரும், மசீச சார்பில் அதன் தலைவர் வீ கா சியோங், துணைத் தலைவர் டாக்டர் கா ஹாங் சூன், தலைமைச் செயலாளர் ச்சியூ மெய் ஃபென் ஆகியோரும், மஇகா சார்பில் எஸ் ஏ விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் எம் சரவணனும் கலந்துகொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில், பிஎன்-ஐக் கலைக்க தலைவர்கள் யாரும் கருத்துடன்பாடு கொள்ளவில்லை என்று முகமட் ஹசான் சொன்னார்.

“எங்களுக்கு முன்னமே தெரியும், இக்கூட்டணியைக் கலைக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்,” என்றார் அவர்.

கடந்த திங்கட்கிழமை, பிஎன் எதிர்காலம் குறித்து தீர்மானிக்க, அதன் உறுப்புக்கட்சிகள் அனைத்தும் கலந்துபேச வேண்டுமென மசீச மற்றும் மஇகா இரண்டும் ஓர் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, பிஎன் தலைமைச் செயலாளர், நஸ்ரி அஸிஸ்-ன் ‘இனவாத’த் தன்மைகொண்ட அறிக்கையில், மசீசவும் மஇகாவும் அதிருப்த்தி அடைந்ததும் இந்த உச்சமன்றக் கூட்ட அழைப்பிற்கு ஒரு காரணம்.

இதற்கிடையே, நஸ்ரி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வரவில்லை. தான் அக்கூட்டத்தில் கலந்துகொண்டால், கூட்டம் நடைபெறாமல் போகலாம் என்பதனால், கூட்டத்தைத் தவிர்க்க உள்ளதாக நேற்று நஸ்ரி கூறியிருந்தார்.

முன்னதாக, நஸ்ரி கூட்டத்திற்கு வந்தால், கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோமென மசீச, மஇகா இரண்டும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.