செமிஞ்யே தேர்தலில்தான் அதிகமான தேர்தல் குற்றங்கள், அதிக தவறுகள் செய்த கட்சி ஹரப்பான்

14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடந்துள்ள ஆறு இடைத் தேர்தல்களில் செமிஞ்யேயில் அதிகமான தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கூறியது.

அதிகமான தேர்தல் குற்றங்களைச் செய்தது ஹரப்பான்(21) என்றும் அதை அடுத்து பின் (13) என்றும் பெர்சே தலைவர் தாமஸ் பான் தெரிவித்தார். பெயர் குறிப்பிடப்படாத இன்னொரு தரப்பும் ஒரு தவற்றைச் செய்தது.

“தேர்தல் குற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையமும் பெர்சே-யும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து சட்டத்தை மீறுவதைக் காண வருத்தமாக உள்ளது.

“சட்டத்தை மீறினாலும் எதுவும் நடக்காது என்ற நினைப்புத்தான் இதற்குக் காரணமா?”, என்றவர் வினவினார்.

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், தண்டம் விதிக்கப்படலாம் ஆனால், குற்றமிழைப்பவர்கள் பெரும்பாலும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதில்லை என்பதையும் பான் சுட்டிக்காட்டினார்.

“அப்படிப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவது அரிதாக உள்ளது. ஜிஇ14க்குப் பின்னர் கேமரன் மலை தேர்தல் குற்றம் மட்டுமே நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டுள்ளது”, என்றாரவர்.