‘சந்தேகத்திற்குரிய’ நிலப் பரிவர்த்தனை தொடர்பில், சாமிவேலுவை விசாரிக்க எம்ஏசிசி-க்கு வலியுறுத்து

பிகேஆர் முன்னாள், துணைச் செயலாளர், ஜனபாலா பெருமாள், ‘சந்தேகத்திற்குரிய’ நிலப் பரிவர்த்தனை தொடர்பில், மஇகா முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலுவை விசாரிக்க சொல்லி, எம்ஏசிசி-ஐ வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், எம்ஏசிசி மீது புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், இரண்டு முறை புகார் அளித்தும், எம்ஏசிசி இதுவரை அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று, எம்ஏசிசி தலைமையகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

மஇகா சுங்கை சிப்புட் தொகுதியின் முன்னாள் தலைவர், எம் லோகநாதனும் இன்று சாமிவேலு மீது புகார் அளிக்க எம்ஏசிசி அலுவலகம் வந்தார். 2005-ம் ஆண்டு முதல், தான் இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்தசொல்லி, எம்ஏசிசியிடம் புகார் அளித்து வருவதாக லோகநாதன் கூறினார்.

‘தோட்டக் கூட்டுறவு’ சங்கம் ஒன்றிடமிருந்து, அதன் பங்குதாரர்களுக்கு மலிவுவிலை வீடு கட்டி கொடுப்பதாகக் கூறி, 101 ஏக்கர் நிலத்தை சாமிவேலு வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

“சந்தை விலையைவிட, பல மடங்கு குறைந்த விலையில் அந்நிலம் வாங்கப்பட்டது. சந்தை விலை ஏக்கருக்கு RM68,000-ஆக இருந்த வேளையில், ஏக்கருக்கு RM11,280 கொடுத்து, அதனை  வாங்கினர்.

“அப்படி வாங்கப்பட்ட அந்நிலத்தை, கூட்டுறவு பங்குத்தாரர்கள் அன்றி, மூன்றாம் நபருக்கு விற்கக்கூடாது, ஆனால் அந்நிலம் ஒரு சீன வணிகருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது,” எனக் குற்றஞ்சாட்டிய அவர், இதுவரை அந்நிலத்தில் எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் நடைபெறவில்லை என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி, கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான ஒரு கட்டடமும் மண்டபமும் கூட, அதே சீன வணிகர் பெயரில் இருப்பதாகவும், அதிலும் சாமிவேலுவுக்குத் தொடர்புண்டு எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

-ஃப்ரி மலேசியா டுடே