எம்எச்370 விமானம் காணமல்போனது தொடர்பாக முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டதாகக் கூறப்படுவதைத் தலைமை விசாரணை அதிகாரி மறுத்தார்.
த ஸ்டாரிடம் பேசிய எம்எச்370 தலைமை விசாரணை அதிகாரி கொக் சூ சோன், தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வெளியிட்டதில்லை என்றார்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தார் சிலர், ஜூலை மாதம் வெளியிடப்பட்ட விபத்துமீதான அறிக்கை முழுமையானது அல்ல என்றும் இராணுவத்தின் ராடார் தரவைப் பார்க்க வேண்டும் என்றும் கோரினர்.
“ராடாரில் பதிவான அத்தனை விவரங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றை அப்படியே வெளியிட முடியாது. அது இராணுவ இரகசியம்”, என்று கூறிய கொக், இக்கேள்வி பலமுறை கேட்கப்பட்டுப் பதிலும் சொல்லப்பட்டு விட்டது என்றார்.
“தகவலை மறைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ராடார் தரவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கிழக்கு நோக்கிச் சென்ற விமானம் மேற்கு நோக்கித் திரும்பியதை நிறுவினோம்.
“நான் ஏதாவது ஒரு தகவலை வெளியிடக்கூடாது என்று நினைத்திருந்தாலும் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சக பணியாளர்கள் விட்டிருப்பார்களா?
“அவர்களில் யாரும் மாறுபட்ட கருத்து சொன்னதில்லையே. மக்கள் அந்த அறிக்கையை கவனமாகப் படித்துப் பார்க்க வேண்டும்”, என்றார்.
மலேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முன்னாள் தலைமை இயக்குனரான கொக், அந்த 449-பக்க அறிக்கை தேடும் நடவடிக்கையில் பங்கேற்ற ஏழு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.
2014 மார்ச், 8-இல் 239 பேருடன் பெய்ஜிங் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த எம்எச்370 எப்படிக் காணாமல் போனது என்பது பெரும் மர்மமாக உள்ளது.
“வல்லுனர்களுக்கே விளங்கவில்லை. கடல் மிகப் பெரியது”, என்றாரவர்.