மாட் சாபு : அம்னோ-பாஸ் ஒத்துழைப்பால், ரந்தாவ் சட்டமன்றத்தை வெல்வது கடினம்

பாஸ் – அம்னோ இடையிலான ஒத்துழைப்பால், பாரிசான் நேசனலிடம் இருந்து ரந்தாவ் சட்டமன்றத்தை, பக்காத்தான் ஹராப்பான் வென்றெடுப்பது கடினமானது என்று அமானா தலைவர் மாட் சாபு கூறியுள்ளார்.

அந்த இரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அக்கூட்டணிக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது, அதேசமயம் இடைத்தேர்தலில் இனவாத பிரச்சினைகளை அவர்கள் எழுப்பக்கூடும் என்பது கவலையளிக்கிறது என்று அவர் சொன்னார்.

“இப்போது நாங்கள் ‘தற்காப்பு’க்காரர்கள், அவர்கள் ‘தாக்குதல்’ நடத்துகிறார்கள். பாஸ் –அம்னோ இணைப்பு, அவர்களைப் பலப்படுத்தியுள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள், என மீடீயா காராங்கிராஃப் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நேர்காணலின் போது அவர் தெரிவித்தார்.

“அக்கூட்டணியின் வெற்றி, பிஎச் மீது எதிர்மறையான கருத்துகளை உருவாக்கியுள்ளது, பிஎச்-ன் நிலைமை சற்று சிக்கலாகியுள்ளது,” என்றார் மாட் சாபு.

“ரந்தாவ்-ஐ வெற்றிகொள்ள நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.”

“ரந்தாவ் வாக்காளர்களிடம் நாங்கள் விளக்கம் அளிப்போம், அதன் பிறகு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது அவர்கள் விருப்பம்,” என தற்காப்பு அமைச்சருமான மாட் சாபு தெரிவித்தார்.