முஹைடின்: மலேசியாவைக் குடியரசாக்க டிஏபி முயலுகிறது

அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் பக்காத்தான் ராக்யாட் மீது வெளிப்படையான தாக்குதலை தொடங்கியதின் வழி அம்னோ பொதுப் பேரவை தொடங்கியுள்ளது.

பக்காத்தான் செய்வது எல்லாம் மலாய் நலன்களுக்கு எதிரானவை என்று அவர் குற்றம் சாட்டினார்.

அவர் நேற்றிரவு அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் பேரவைகளைக் கூட்டாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

டிஏபி குடியரசு ஒன்றை தோற்றுவிக்க முயலுவதாகக் குற்றம் சாட்டியதின் வழி அவர் தமது உரையைத் தொடங்கினார்.

மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை, கூட்டரசு சமயம் என்னும் முறையில் இஸ்லாம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த மலேசியப் பண்புகள், வரலாறு, கௌரவம் முதலானவற்றை டிஏபி நாடும் குடியரசு ஒதுக்கி விடும் என அவர் சொன்னார்.

“பிரதமர் பதவி நேரடியாக தேர்வு செய்யப்படுகிறது. யாங் டி பெர்துவான் அகோங்-கினால் நியமிக்கப்படவில்லை என அது துணிச்சலாகக் கூறுகிறது. அதன் அர்த்தம் என்ன?”

“நாம் இதுகாறும் பின்பற்றி வருகின்ற நாடாளுமன்ற ஜனநாயக முறையும்  அரசமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி முறையும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அதன் போராட்டத்துக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதே அதன் பொருள் ஆகும்,” என முஹைடின் சொன்னார்.

பிகேஆர்-தீவிர தாராளப் போக்குடையது இருந்தும் சமயத்தைப் பற்றிப் பேசுகிறது

முஹைடின் பிகேஆர் கட்சியை கண்டிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

நம்பிக்கை நெருக்கடியை எதிர்நோக்கும், தேர்ந்தெடுக்கப்படாத கட்சித் தலைவர் ஒருவரை தற்காப்பதே அந்தக் கட்சியின் ஒரே நிகழ்ச்சி நிரல் என்று அவர் சாடினார்.

“நம்பிக்கை பிரச்னைகளில் மூழ்கியுள்ள தலைவர் ஒருவரைக் கொண்டுள்ள பிகேஆர் எவ்வாறு நமது சமயம், இனம், நாடு ஆகியவற்றைப் பாதுகாக்கப் போகிறது ?” என அம்னோ துணைத் தலைவர் வினவினார்.

“அந்தக் கட்சி இப்போது இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது. ஒன்று தீவிர தாராளப் போக்குடையது இன்னொன்று சமயத்தைச் சார்ந்துள்ளது- இரண்டு பிரிவுகளும் ஒரே நோக்கத்தை அடைய அதாவது கட்சித் தலைவரைப் பாதுகாக்க வெவ்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றன.”

அம்னோவின் பாரம்பரிய வைரியான பாஸ் கட்சி குறித்தும் முஹைடின் பேசினார். டிஏபி-யும் பிகேஆர்-ரும் எதிர்ப்பதால் பாஸ் இப்போது தனது இஸ்லாமிய நாடு என்னும் கோட்பாட்டை பின்பற்றுவதில்லை என்றார் அவர்.

“அது இஸ்லாமிய நாட்டை ஆதரிக்காத யாரையும் சமயத்துக்கு எதிரானவர் ( khafir )எனக் குற்றம் சாட்டும் அளவுக்கு கடப்பாட்டு உணர்வுடன் இருந்தது. பாஸ் உருவகப்படுத்தும் இஸ்லாமிய நாட்டை ஆதரிக்காததால் அம்னோவைக் கூட அது அத்துமீறுகின்றவர் ( taghut ) என்று கூட அழைத்துள்ளது.”

“பிகேஆர், டிஏபி கட்சிகளை பாஸ்  அத்துமீறுகின்றவர்கள் ( taghut ) என ஒரு போதும் அழைத்ததில்லை. அதற்குப் பதில் சம தகுதி கொண்ட பங்காளியாக அந்த இரண்டு கட்சிகளையும் பாஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. பாஸ் கட்சியின் அரசியல் அகராதியில் இஸ்லாமிய நாடு என்ற சொல் இப்போது கிடையாது”, என்றும் முஹைடின் கூறினார்.

TAGS: