இனப்பாகுபாடின்றி, ஒடுக்குமுறையின்றி, சமமான வேலை வாய்ப்புகள் அனைத்து மலேசியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தி கூறினார்.
தனியார் துறைகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் அதிக ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் எனும் அண்மைய ஆய்வு ஒன்றிற்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
“மலேசியாவில் ஒடுக்குமுறைக்கு இடமிருக்கக் கூடாது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட வேண்டும். வாய்ப்பு கொடுக்காமல், ஒருவர் தகுதியானவரா இல்லையா என்பது தெரியாது.
“அனைத்து இனங்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்குவதன் வழி, முதலாளிகள் மக்களை ஒருங்கிணைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, இது மலேசியத் தொழிலாளர்களை மேம்படுத்தவும் உதவும் என நான் நம்புகிறேன்,” என நேற்றிரவு, மலாக்கா, தஞ்சோங் மிஞ்சாக்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
ஒற்றுமைத்துறை இலாகா, இப்பிரச்சினையைப் பரிசீலனை செய்து வருகிறது, இச்சிக்கலை எதிர்கொள்ள திட்டங்களையும் உருவாக்கி வருவதாக வேதா கூறினார்.
சமீபத்தில், ஆளுமை மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (Centre For Governance and Political Studies) தனியார் துறைகளில் பணிக்கு விண்ணப்பிக்கும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும், குறிப்பாக பெண்கள், அதிக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாவதாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் கணக்கெடுப்பை அம்பலப்படுத்தியது.
நேர்காணல்களில் இவர்கள் பல தடைகளை எதிர்கொள்கின்றனர், ‘மெண்டரின்’ மொழி பேசும் சீன விண்ணப்பதாரர்களுடன் ஒப்பிடும்போது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
“ஆக, இனப்பாகுபாடு இருக்கிறதா? பதில், ஆம் என்றால், மலாய்க்காரர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் இதனால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்,” என்று சென்-ஜிபிஎஸ் மூத்த ஆராய்ச்சியாளர் ஜைடல் பஹருடின் கூறினார்.
இதற்கிடையே, இன அரசியலைப் பயன்படுத்தி, மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டாம் என வேதா அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டார்.
யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், எதிர்க்கட்சியினர் மக்களின் ஆதரவைப் பெற, இன உணர்வைத் தூண்டி விடுகின்றனர் என்றார் அவர்.
“முன்பு, அம்னோ அரசாங்கத்தை நிர்வகித்தபோது, நஜிப் தலைமைத்துவத்தின் கீழ், மக்களை ஒற்றுமைப்படுத்த, நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதைப் பறைசாற்ற, ‘1மலேசியா’ சுலோகம் பயன்படுத்தப்பட்டது.
“ஆனால் இன்று, அவர்கள் எதிர்க்கட்சியினர் ஆனபின்பு, இந்த சுலோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டனர். இது 62 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்த நம் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல. நாம் இன, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயல்படக்கூடாது.
“நாட்டின் நலன் கருதி, அனைத்து அரசியல்வாதிகளும், அறிக்கை வெளியிடும்போது இதுபோன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென நான் அறிவுறுத்த விரும்புகிறேன். இதுவரை உருவாக்கியதை, அழித்துவிட வேண்டாம்,” என்றார் அவர்.
nandri