அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை தலிபானோடு ஒப்பிடுவதா? பிஎச்-க்கு மலாய்க்காரர் ஆதரவு சரிய வாய்ப்புண்டு

பேராக் டிஏபி தலைவர், ங்கா கோர் மிங், அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைத் தலிபானோடு ஒப்பிட்டு பேசியது, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) எதிராக மாற்ற வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளது.

“ங்காவின் அறிக்கை, பிஎச்-க்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த பொதுத் தேர்தலில், பிஎச்-க்குக் கிடைத்த 25 விழுக்காடு மலாய்க்காரர்கள் வாக்குகள் இதனால் சரிய வாய்ப்புள்ளது,” என்று மலாயாப் பலகலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் முகமட் சம்சிநோர் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

“பிஎச் வெற்றிபெறக் காரணம், அவர்களின் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனமும் அவர்கள் எதிர்நோக்கிய 1எம்டிபி போன்ற பிரச்சனைகளும்கூட அதற்கு காரணம்,” என மலேசியாகினியிடம் அவர் சொன்னார்.

அம்னோ – பாஸ் ஒத்துழைப்போடு அரசாங்கம் அமைந்தால், மலேசியா தலிபான்கள் ஆட்சிசெய்த ஆப்கானிஸ்தான் போன்று ஆகிவிடும் என்று ங்கா கூறியதாக சின் ச்சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில், ஜொகூர் டிஏபி பரப்புரை செயலாளர், ஷேக் ஓமார் அலி ங்காவை கண்டித்ததோடு, இதுபோன்ற அறிக்கைகள் மக்களின் ஆதரவைத் திரட்ட, டிஏபிக்கு ஒருபோதும் உதவாது என்றும் ஷேக் கூறியுள்ளார்.