ஜோங்-நாம் கொலை: சித்தி ஆயிஷா விடுவிக்கப்பட்டார்

ஷா ஆலம் உயர் நீதிமன்றம், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-அன்னின் ஒருவழிச் சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்தததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்தோனேசியப் பெண்ணை இன்று விடுவித்தது.

சித்தி ஆயிஷாவுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டைக் கைவிடுவதாக அரசுத் தரப்பு மனுச் செய்ததை அடுத்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

ஆனால் அவரை குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற எதிர்த்தரப்பின் கோரிக்கையை நீதிபதி அஸ்மி அரிப்பின் ஏற்கவில்லை. அவ்வழக்கில் நியாயமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்றாரவர்.

சித்தி ஆயிஷா,26, ஒரு வியட்நாமியரான டோன் தி ஹுவோங்குடனும் இன்னும் பிடிபடாதிருக்கும் மேலும் நால்வருடனும் சேர்ந்து ஜோங்-நாமை விஎக்ஸ் என்னும் இரசாயன விஷப் பொருள் கொண்டு கொலை செய்தததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அந்த அரசியல் கொலையில் சித்தி ஆயிஷாவும் டோனும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக தொடக்கத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது.

“அவர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். இதில் வட கொரியாவுக்குத் தொடர்பு உள்ளது என்பதே என் கருத்து”, என சித்தி ஆயிஷாவின் வழக்குரைஞர் கூய் சூன் செங் கூறினார்.