எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிடும்போது பக்கத்தான் ஹரப்பான் அதிக தேர்தல் குற்றங்களைச் செய்யக் காரணம் அது ஆளும் கட்சியாக இருப்பதுதான் என்கிறார் தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன்.
“நான் ஹரப்பானைத் தற்காத்துப் பேசவில்லை. ஆனால், ஆளும் கட்சியாக இருப்பதால் அது அதிகக் குற்றச் செயல்களைச் செய்வதுபோல் தெரிகிறது.
“ஆளும் கட்சி என்பதால் எதிர்கட்சிகளால் செய்ய இயலாத சில தவறுகளை அது செய்ய முடியும்……அரசாங்கச் சோத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல், அமைச்சரின் நேரம் தவறாகப் பயன்படுத்தப்படுதல், வாக்குகளைக் கவரும் அரசாங்க நடவடிக்கைகள் போன்றவை அதில் அடங்கும்”, என வர்த்தக வானொலி நிலையமான பிஎப்எம்-மிடம் அவர் தெரிவித்தார்.
அண்மையில் முடிவடைந்த செமிஞ்யே இடைத் தேர்தலில் ஆளும் கூட்டணியே அதிகமான தேர்தல் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுவது குறித்துக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
அரசியல் கட்சிகள் தேர்தல் குற்றங்கள் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கிண்டலடித்தார்.
“அவற்றுக்கு இது பழகிப் போய்விட்டது”, என்றார்.