மலேசிய விமான நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
பல்வேறு கோணங்களில் ஆராயும் அரசாங்கம் தேசிய விமான நிறுவனமான அதனை இழுத்து மூடி விடலாமா என்றுகூட ஆராய்கிறது என்றார்.
“தேசிய விமான நிறுவனத்தை மூடுவது ஒரு கடுமையான விவகாரமாகும்.
“அதை இழுத்து மூடுவதா, விற்று விடுவதா, மறுபடியும் நிதியுதவி செய்வதா?. இவை குறித்து எல்லாம் ஆராய வேண்டியுள்ளது”, என்று மகாதிர் கூறினார்.
மூன்றாண்டுகளில் பணம் பண்ணப்போவதாக அறிவித்திருந்த எம்ஏஎஸ் அந்த இலக்கில் தவறிவிட்டதால் இனியும் அதை வைத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு எம்ஏஎஸ் ஆதாயம் காண்பது முடியாத காரியம் என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக நேற்று த சன் நாளேடு கூறியது.
மலேசிய விமான நிறுவனம் இவ்வாண்டும் இழப்புத்தான் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இழப்பு எவ்வளவு என்பதை அது குறிப்பிடவில்லை.