நம் நாட்டில் தொடர்ந்து சமூகக் கதைகள்தான் எழுதப்பட்டு வருகின்றன. மிகவும் அபூர்வமாகவே மர்மம், துப்பறிதல், ஹாரர், த்ரில்லர் வகை கதைகள் எழுதப்படுகின்றன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மதியழகன் முனியாண்டி நிலங்களின் நெடுங்கணக்கு என்கிற தலைப்பில் த்ரில்லர் வகை குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நூலின் அறிமுக விழா வரும் மார்ச் 16, 2019, சனிக்கிழமை, மாலை மணி 7-க்கு மலாயாப் பல்கலைகழகத்தில் வெளியீடு காண்கிறது.
இக்குறுநாவலை, விரிவுரையாளர், முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் திறனாய்வு செய்து வெளியிடுகிறார்.
புத்தக விமர்சனத்தைப் பகாங் மாநிலக் கல்வி இலாகாத் துணை இயக்குநர் (தமிழ் பிரிவு) திரு சரவணன் இராமசந்திரனும் திரு கனகராஜாவும் புத்தகம் குறித்த விமர்சனத்தை வழங்க உள்ளனர். பதிப்புரையை யோகி சந்திரு செய்யவுள்ளார்.
சரித்திர ஆராய்ச்சிக்காக, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியா வரும் செல்லத்துரை என்கிற ஆராய்ச்சியாளர், ஒருநாள் காணாமல் போய்விடுகிறார். எங்குத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இருபது வருடங்கள் கழித்து, காணாமல் போன ஆய்வாளர் செல்லத்துரையைத் தேடி, ஓர் இளம் வழக்கறிஞர் புறப்படுகிறார். செல்லத்துரையைத் தேடும் நடவடிக்கையில், அந்த இளம் வழக்கறிஞர் சந்திக்கும் இன்னல்கள், தடங்கல்கள், ஆபத்துகள் எனக் கதை கடந்து செல்கிறது. இந்தக் கதை முழுக்க முழுக்க மலேசிய மண் சார்ந்து எழுதப்பட்டது.
ஒவ்வொரு மண்ணுக்குப் பின்னாடியும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு நிலத்துக்கு பின்னாடியும் ஒரு கதை உண்டு. அந்தக் கதைகள் நீண்ட கணக்கு கொண்டது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆயிரம் இரண்டாயிரம் வருடமாக இந்த வரலாறுகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாறு குறித்து இந்தக் கதை பேசுகிறது என்று இந்த நூலின் தலைப்பு குறித்து நூலாசிரியர் மதியழகன் விளக்கம் கொடுத்தார்.
மதியழகன் சில ஆண்டுகளாக முகநூல், வலைப்பக்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். பல நீண்ட அரசியல் கட்டுரைகள் எழுதியவர். இவர் ஓர் அறிமுக எழுத்தாளர் ஆவார். நிலங்களின் நெடுங்கணக்கு இவரின் முதல் நூல்.
வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பயன் பெறலாம். சிறந்த புத்தகங்களுக்கு நமது ஆதரவினை வழங்குவோம்.