நாடாளுமன்றம் | பொதுத்துறை பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, தனியார் மயமாக்கலை ஊக்குவிக்கும் பிரதமர் டாக்டர் மகாதிரின் ஆலோசனைக்கு, அது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வல்ல என முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.
டாக்டர் மகாதிர் பரிந்துரைக்கும் தனியார்மயமாக்கல் திறம்பட அமைய, பல காரணிகளைச் சார்ந்திருக்கிறது என நஜிப் தெரிவித்தார்.
“மாஸ் (மலேசிய ஏர்லைன்ஸ்) அவரது காலத்தில் (டாக்டர் மகாதீர்) தனியார்மயமாக்கப்பட்டது. […] மீண்டும் அதை வாங்குவதற்காக RM1.6 பில்லியனை நாம் செலவளிக்க வேண்டி வந்தது. அது தோல்வியுற்ற தனியார்மயமாக்கல்.
“எனவே, தனியார்மயமாக்கல் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரு மருந்து அல்ல, இது ஒரு துல்லியமான நடவடிக்கையா என்பதை உறுதி செய்ய, சில சூழ்நிலைகள் உள்ளன,” என அவர் நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும், டாக்டர் மகாதீரின் முன்மொழிவை நஜிப் முற்றாக மறுக்கவில்லை.
பிப்ரவரி 21-ம் தேதி, அரசு ஊழியர்கள் அதிகமாக உள்ளனர், அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என மகாதிர் கூறியிருந்தார்.
தனியார் துறைகளில், அதிக சம்பளத்தோடு, கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாகவும் அந்தப் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் தெரிவித்திருந்தார்.