நச்சு இரசாயண மாசு : பாசீர் கூடாங்கில் 111 பள்ளிகள் மூடப்படுகின்றன

ஜொகூர், பாசீர் கூடாங்கிலுள்ள 111 பள்ளிகளும் உடனடியாக மூடப்படுவதாகக் கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலிக் அறிவித்துள்ளார்.

மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுவின் அறிக்கை மற்றும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்படுவதாக, இன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் மஸ்லி கூறியுள்ளார்.

“இதனைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், நிலைமை நல்லநிலைக்கு திரும்பும்வரை, பள்ளிக்கு வர வேண்டாம்.

“அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. அவ்வப்போது அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கடந்த வியாழனன்று, பாசீர் கூடாங்கிலுள்ள கிம் கிம் ஆற்றில், வீசப்பட்ட இரசாயணக் கழிவால்  ஏற்பட்ட நச்சு மாசின் காரணமாக, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் 9 பேர் உட்பட, 506 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்றுடன், 7 நாள்கள் கடந்த நிலையில், இந்த நச்சு மாசினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூச்சு திணரல், மயக்கம், வாந்தி காரணமாக  பள்ளி மாணவர்கள்  தாமான் பாசீர் பூத்தே சமூக மண்டபத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-பெர்னாமா