1எம்டிபி கணக்கறிக்கையில் மோசடி நோக்கத்துடன் திருத்தம் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் 1எம்டிபி தலைவர் அருள் கண்ட கந்தசாமி ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு அரசுத்தரப்புக்கு நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கசாலி அனுமதி அளித்தார். எதிர்த் தரப்பும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.
தொடக்கத்தில் கடந்த அண்டு டிசம்பர் 12-இல், நஜிப்பும் அருளும் தனித்தனியேதான் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
நஜிப், 1எம்டிபி இறுதிக் கணக்கறிக்கை பொதுக் கணக்குக்குழுவிடம் ஒப்படைக்கப்படுவதற்குமுன் அதில் சில திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டாராம்.
புத்ரா ஜெயா, பிரதமர்துறை அலுவலகத்தில் அவர் இக்குற்றச்செயலைப் புரிந்திருக்கிறார்.
இதனிடேயே அதே நாளில், அதே இடத்தில் நஜிப்புக்கு உடந்தையாக இருந்தார் என்பது அருள்மீதான குற்றச்சாட்டு.
இருவரையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு செய்துகொண்ட விண்ணப்பத்தை ஏற்ற செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி கூட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார்.