போலிஸ் துணைத் தலைவராக ஹமீத் பாடோர் நியமனம்

புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர், அப்துல் ஹமீத் பாடோர், தேசியப் போலீஸ் தலைமைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இன்று, கோலாலம்பூரில், பதவி ஓய்வு பெறும் நூர் ரஷிட் இப்ராஹிமுக்குப் பதிலாக, தேசியப் போலிஸ் படைத் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் முன்னிலையில் அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.

போலிஸ் படை சிறப்புப் பிரிவில் இருந்தபோது, 2015-ல் 1எம்டிபி வழக்கு விசாரணையில் பிரதான சாட்சிகளை மறைக்கும் முயற்சி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியதும் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதும் அவர் மீது மக்களின் கவனத்தைத் திருப்பியது.

தேசிய வழக்கறிஞர் பதவியில் இருந்து அப்துல் கானி பட்டேல் நீக்கப்பட்ட ஒரு மாத காலத்தில், பிரதமர் துறை இலாகாவிற்கு ஹமீத் மாற்றப்பட்டார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அமைத்த சில வாரங்களில், தேசியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் மே மாதத்தில், போலிஸ் படைத் தலைவர் ஃபூஸியின் பதவி ஓய்வுக்குப் பின்னர், ஹமீத் அப்பதவிக்குப் பொறுப்பேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி தனக்கு எந்தவொரு தகவலும் தெரியாது என ஹமீத் கூறியுள்ளார்.