இந்திராவின் முன்னாள் கணவர், மகள் மலேசியாவிலிருந்து வெளியேறியதற்கு அறிகுறிகள் இல்லை- ஐஜிபி

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகம்மட் ரிதுவான் அப்துல்லாவும் அவர்களின் இளைய மகள் பிரசன்னா திக்‌ஷாவும் வெளிநாடு சென்றதற்கான அறிகுறி எதுவும் இல்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார்.

“குடிநுழைவுத் துறையில் விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றார்கள் என்பதைக் காண்பிக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.

“ஆனால், ஒருவர் சட்டவிரோதமான வழிகளில்கூட நாட்டைவிட்டு வெளியேற முடியும் என்பதையும் மறந்துவிடக் கூடாது”, என்றாரவர்.

வெளிநாட்டுப் போலீசாரின் உதவி நாடப்பட்டதா என்று கேட்டதற்கு இல்லை என்றுரைத்த அவர், அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் இல்லையே என்றார்.

“அவர்கள் (ரிதுவானும் பிரசன்னாவும்) இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தால் அந்நாட்டில் உள்ள எங்களின் சகாக்களின் உதவியை நாடுவோம்.

“வெளிநாட்டு உதவியைத்தான் நாடவில்லையே தவிர பொதுமக்களிடம் அவர்களின் இருப்பிடம் தெரிந்தால் தகவல் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்”, என்று பூஸி கூறினார்.

ஆனால், பொதுமக்களிடமிருந்து இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை