சுங்கை கிம் கிம்: 24 மணி நேர சுத்திகரிப்பு பணிகள், 680 மீட்டர் நிறைவு

பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம் ஆற்றில், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடந்துவருகிறது.

நியமிக்கப்பட்ட 3 குத்தகையாளர்களுடன் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு இலாகாவைச் சேர்ந்த ‘ஹஜ்மாட்’ குழு, மலேசிய ஆயுதப்படை, சுற்றுச்சூழல் துறை, வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி நீக்கக் குழு போன்றவையோடு, சில தனியார் நிறுவனங்களும் பணியில் இறங்கியுள்ளன.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின், நேற்று மாலை வரை, சுங்கை கிம் கிம்-இன் மோசமாக பாதிக்கப்பட்ட 680 மீட்டர் பகுதியைச் சுத்தம் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

 

எஞ்சியிருக்கும் 900 மீட்டரைச் சுத்தம் செய்ய, அக்குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரம் வேலை செய்யப்போவதாக இயோ சொன்னார்.

நியமிக்கப்பட்ட குத்தகையாளர் ஒருவர், அடுத்த 24 மணி நேரத்திற்கு, 60 பேர் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடுவர் எனத் தெரிவித்தார்.

மாசுபாட்டின் மீது மட்டும் கவனம் செலுத்துவது என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நதியின் படுகை வரை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.