தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவராக, ரொனால்ட் கீண்டியின் பதவியைப் பராமரித்து வரும் டாக்டர் மகாதிரின் செய்கையை விமர்சிக்கச் சொல்லி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாலர்களைப் பெர்சே வலியுறுத்தியுள்ளது.
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மகாதிரின் இந்த நடவடிக்கை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பங்களிப்பை மக்களவையில் குறைத்து மதிப்பிடுகிறது என பெர்சே கூறியுள்ளது.
பெலூரான் நாடாளுமன்ற உறுப்பினர், பெர்சத்துவில் இணைந்த பின்னரும், அவரைப் பிஏசி குழுவிற்குத் தலைவராக வைத்திருக்க பிரதமர் எடுத்துள்ள ஒருதலைப்பட்ச நடவடிக்கையில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பெர்சே கூறியுள்ளது.
பொதுவாக, அரசாங்க கண்காணிப்புக் குழுவாகச் செயல்படும் பிஏசி-க்குத் தலைவராக, ஓர் எதிர்க்கட்சி எம்பி நியமிக்கப்படுவார். ஆனால், கீண்டி தற்போது ஆளுங்கட்சி எம்பியாக மாறிவிட்டார் என அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், அம்னோ உறுப்பினராக இருந்த கீண்டி, அண்மையில் பெர்சத்துவில் இணைந்தார்.
பிஏசியின் செயல்பாடுகள், ஆளுங்கட்சியினால் பாதிப்படையாமல் இருக்க, அக்குழுவிற்கு ஓர் எதிர்க்கட்சி பிரதிநிதி தலைமையேற்க வேண்டும் என பெர்சே கூறியுள்ளது.
இது, பிஎச் தேர்தல் வாக்குறுதிகளில், மகாதிர் செய்த மற்றுமொரு ‘யூ டெர்ன்’ என பெர்சே தெரிவித்தது.