‘மனிதாபிமானம்’ காரணமாக ஶ்ரீராமை மாற்ற மனம் வரவில்லை

ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நிறுத்தியது, மனிதாபிமான அடிப்படையில் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஶ்ரீராமுக்குப் பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த மனம் வரவில்லை என, இன்று, ரெம்பாவ்வில், சுமார் 500 பேர் கூடியிருந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அன்வார் சொன்னார்.

“ஶ்ரீராம் ஓர் இந்தியர், இந்து மதத்தைச் சார்ந்தவர், ஆனால், காயம் பட்டிருந்த ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமியர்களுக்கு உதவச் சென்ற, தன்னார்வளர் குழுவில் அவரும் இணைந்துகொண்டார்.

“மருத்துவரான அவர், கஷ்டப்படும் முஸ்லிம்களுக்கு உதவ சிரியாகூட சென்றிருக்கிறார்.

“அம்னோ துணைத் தலைவர், முகமட் ஹசான் எங்குச் சென்றிருக்கிறார்? அதனால்தான், ஶ்ரீராம்மை மாற்ற எனக்கு மனம் வரவில்லை,” என அன்வார் சொன்னார்.

இதற்கிடையே, இன்றைய நிகழ்ச்சியில், மண்டபத்தில் கூடியிருந்த அனைவரையும் ரந்தாவ் சட்டமன்ற பிரச்சார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

“உங்கள் அனைவரையும் நான் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கிறேன். சான்று கடிதங்கள் தேவையில்லை, தேர்தல் ஆணயம் கேட்டால் இந்த வீடியோவைப் போட்டுக் காட்டுங்கள்,” என்றார் அன்வார்.