அம்னோவின் ‘வலிமை’தான் மசீச-வை பிஎன்னில் தொடர்ந்து இருக்க வைத்துள்ளது -நஸ்ரி

மசீசவுக்கு அம்னோவின் வலிமைமீது நம்பிக்கை உள்ளது, அதனால்தான் அது பிஎன்னில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தது என்கிறார் பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அசிஸ்.

“நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் பிஎன்னில் இருக்க மாட்டார்கள்.

“அம்னோ வலிமை வாய்ந்தது அதனால்தான் பிஎன்னில் ஒன்றாய் இருப்போம் என்றவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்”, என நஸ்ரி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மசீச பிஎன்னில் தொடர்ந்து இருக்கவும் பல இன ஒத்துழைப்பைத் தொடரவும் அதன் மத்திய செயல்குழு முடிவெடுத்திருப்பதாக கட்சித் தலைவர் வீ கா சியோங், கட்சியின் நேற்று அறிவித்தது குறித்துக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

மேலும் பேசிய நஸ்ரி, 15வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிக்கு அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு ஒன்றே வழி என்றும் கூறினார்.

“அம்னோ-பாஸ் உறவுகள் வலிவடைந்து வருகின்றன, கேமரன் மலை, செமிஞ்யே தேர்தல்களே சான்று.

“இந்த உறவுகள் ஜிஇ 15வரை நீடிப்பதை உறுதிப்படுத்துவோம்”, என்றாரவர்.

மசீசவும் மஇகாவும் பிஎன்னிலிருந்து விலகி வேறு கூட்டணி அமைக்கப்போவதாக அறிக்கை விடுத்து சில வாரங்கள் ஆகும் வேளையில் மசீச இப்படி ஓர் அறிவிப்பைச் செய்துள்ளது.