பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருப்பது போல், தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவர் பதவியில், எதிர்க்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் நியமிக்கப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.
“தேர்தல் வாக்குறுதியில் நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால், இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் என்ன என்பதையும் நாம் கேட்டறிய வேண்டும்,” என கூறினார்.
தற்போது பெர்சத்துவில் இணைந்துவிட்ட ரொனால்ட் கீண்டியை, பிஏசி தலைவராக நிலைநிறுத்த வேண்டியதன் தேவை என்ன என்பது பற்றி, பிரதமரிடம் கலந்துபேச வேண்டும் என்றார் அவர்.
கடந்த மார்ச் 15-ம் தேதி, ரொனால்ட் மற்றும் ஏழு சபா எம்பி-க்கள் பெர்சத்துவில் இணைந்தனர்.
இம்முடிவில், அரசாங்க எம்பி-க்கள் – பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா மற்றும் டிஏபி தலைவர் ஹன்னா இயோ உட்பட – பலருக்குத் திருப்தி இல்லை.
இதற்கிடையே, இதுகுறித்து கேட்டபோது, ரொனால்ட் எதிர்க்கட்சியில் இருந்தபோதுதான் பிஏசி தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார் என மகாதிர் தெரிவித்தார்.
அப்பதவியில் ரொனால்ட் நிலைத்திருப்பதில், பிஎச் கூட்டணிக்கு உடன்பாடா என்று கேட்டதற்கு, அன்வார், “தெரியவில்லை, ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார்.