போதை மருந்து கடத்தலுக்காக, மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் ஒருவரின் மன்னிப்பு முறையீட்டைத் தள்ளுபடி செய்து, அவரைத் தூக்கிலிட்ட 5 மாதங்களுக்குப் பின்னர், இந்த வாரத்தில் மற்றொருவரைத் தூக்கிலிட சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கொலை குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட, சரவாக்கைச் சேர்ந்த மைக்கேல் காரிங்’கின் குடும்பத்தாரிடம், சாங்கி சிறைச்சாலையின் அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இது தன்னுரிமை குழுவான, லோயர்ஸ் ஒஃப் லிபர்ட்டி (எல்.ஃப்.எல்) குழுவின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளிக்கிழமை, தண்டனையை நிறைவேற்றுவதற்கு 8 நாட்கள் இருக்கும்போதுதான், குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அக்குழு தெரிவித்துள்ளது.
“இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்ய, அவர்கள் கடிதம் வழி கேட்டுள்ளனர்.
“இந்த மிகக் குறுகியகால அறிவிப்பு அவர்களுக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
“மைக்கேல், அவரது குடும்பத்துடன் தனது கடைசி நேரத்தைக் கழிக்க, குறுகிய நேரமே வழங்கப்பட்டுள்ளது,” என்று எல்.ஃப்.எல்.-இன் வழக்கறிஞர் என் சுரேந்திரன் தெரிவித்தார்.
மைக்கேல் தனது குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், புனர்வாழ்வுக்காக அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார் சுரேந்திரன்.
“மரணத் தண்டனை, கடுமையான குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் என்பதாக நிரூபிக்கப்படவில்லை.
“மைக்கேல் மீதான மரண தண்டனை வன்முறை கலாச்சாரத்தை வலுவூட்டுகிறதே ஒழிய, சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்வைப் பாதுகாப்பாக வைக்க அது உதவாது,” என்று அவர் மேலும் கூறினார்.
2014-ல் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, அக்டோபர் 26, 2018-ல், மலேசியரான பிரபு என் பத்மநாதன் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.