பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம், இரசாயணக் கழிவு மாசு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, கடந்த சனிக்கிழமை வரை 9 பேரை போலிஸ் கைது செய்துள்ளது.
ஜொகூரில் இருவரும், ஜொகூருக்கு வெளியில் எழுவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் தெரிவித்தார்.
இன்று தொடக்கம் 6 நாட்களுக்கு, அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்ற அவர், செக்ஷன் 278, 284 மற்றும் 326-ன் கீழ், இவ்வழக்கு விசாரணை செய்யப்படுவதாகவும் சொன்னார்.
மார்ச் 7-ம் தேதி, கிம் கிம் ஆற்றில் இரசாயணக் கழிவுகள் வீசப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மாசினால், பல மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு மூச்சு திணரல், வாந்தி, குமட்டல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 13-ம் தேதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்வி அமைச்சு பாசீர் கூடாங்கில் இருக்கும் 111 பள்ளிகளையும் மூட உத்தரவிட்டது.
-ஃபிரி மலேசியா டுடே