அம்னோவுடன் பாஸ் இணையாது- ஹாடி திட்டவட்டம்

இரண்டு வாரங்களுக்குமுன் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை முறைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வில் பேசிய அம்னோ தலைவர் அதை ஒரு “திருமணச் சடங்கு” என்று வருணித்திருந்தார். ஆனால், இப்போது இஸ்லாமியக் கட்சித் தலைவரோ அம்னோவும் பாஸும் ஒன்றிணைவது நடவாத காரியம் என்றும் அது கூடா உறவுமுறையாகிவிடும் என்றும் கூறுகிறார்.

அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான உறவுமுறை உடன்பிறப்புகளுக்கிடையிலான உறவு போன்றது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். ஹாடி நேற்றிரவு கோலாலும்பூரில், மலாய் ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வில் உரையாற்றினார்.

“இஸ்லாத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் பாஸ்- அம்னோ இணைவதை எண்ணி அளவுக்கு அதிகமாகக் கவலை கொண்டிருக்கின்றன, அது மலேசியாவை தாலிபான் அரசாக மாற்றிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். இன்னும் சிலர் பாஸ்-அம்னோ திருமணம் நடந்து விட்டது என்றும் சொல்கிறார்கள்.

“நான் சொல்கிறேன், பாஸ் அம்னோவை மணம் செய்துகொள்ள முடியாது. உடன்பிறப்புகள் எப்படித் திருமணம் செய்துகொள்ள முடியும்? அப்படிச் செய்து கொண்டால் அது தகாத உறவுமுறை ஆகிவிடாதா?”, என்று ஹாடி கூறினார்.