அம்னோ மற்றும் பாஸ் கூட்டணி ரந்தாவ் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும். மலாய் மற்றும் இஸ்லாம் என்ற அடிப்படையில் இணைந்துள்ள இந்த கூட்டணி கேமரன் மலை மற்றும் செமிஞ்சி இடைத்தேர்தல்களில் வென்றது.
அந்த வியூகம் இந்த முறை வென்றால அது பல்லின அரசியலுக்கு ஒரு பின்னடைவாக அமையும்.
மலாய்காரக்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை 47% -மாக இருக்கும் இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 20,926 ஆவர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 27% ஆகும்.
இதுவரையில் தேசிய முன்னணியின் கோட்டையாக இருக்கும் இந்த தொகுதியில், மருத்துவர் ஸ்ரீராம் அவர்களை நம்பிக்கை கூட்டணி தேர்வு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இனம் மற்றும் மதம் அடிப்படையில் போகாமல் பல்லின அரசியல் போக்குடன் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீராம் அந்த தொகுதியில் இதற்கு முன்பு வேட்பாளராக முன்மொழியப்பட்டவர் ஆவார்.
ரந்தாவ் இடைத்தேர்தலில் ஶ்ரீராமை நிறுத்தியது, மனிதாபிமான அடிப்படையில் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். ஆனால், அது ஒரு முக்கியமான அரசியல் முடிவு என்பதை உணரலாம்.
“என் நிலைமை ஒரு இக்கட்டான நிலையில்தான் உள்ளது” என்கிறார் ஸ்ரீராம். “பொது தேர்தலின் சூழல் இப்போது இல்லை. நான் போட்டி போடுவது முன்னாள் மந்திரி புசாருடன், எனவே, ஒரு வேட்பாளார் என்ற வகையில் நான் மிகவும் பணிவுடன் களத்தில் இறங்கியுள்ளேன்” என்கிறார்.
“வெற்றி பெற முடியும்”, என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இருக்கும் ஸ்ரீராம், முழுமையான அனைத்து நம்பிக்கை கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேவை என்பதோடு, பல்லின அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ள மலாய்காரர்களின் ஆதரவு முக்கியம் என்கிறார்.
மக்கள் நீதி கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீராம், பொது வாழ்க்கையில் பல அரும்பணிகளையும் செய்திள்ளார். ரந்தாவ் வட்டாரத்திலும் தனது சேவையை தொடர்து வருகிறார்.
இடைத்தேர்தல் என்பது மக்களின் அரசியல் மனப்போக்கை சார்ந்தது, அவ்வகையில் மதம்-இனம் என்றவற்றை கொண்டு பெரும்பான்மை மலாய்காரர்களின் வாக்குகளை பெற தேசிய முன்னணி முயலும்.
அதேவேலையில், நம்பிக்கை கூட்டணியின் மீதுள்ள அதிர்ப்தியை காட்ட ஒரு தரப்பினர் வாக்களிக்க வரமாட்டார்கள்.
இந்தச் சூழல் தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும். அப்படி அமையுமானால் அது மலாய்காரர்கள் அல்லாதவர்களின் அரசியல் பலத்திற்கு மாபெரும் சாவாலாக அமையும். மேலும் எதிர்காலத்தில் இந்தியர்களை வேட்பாளராக தேர்வு செய்யும் சூழலும் வெகுவாக பாதிப்படையும்.
இந்த இடத்தேர்தலில் ஸ்ரீராமின் வெற்றி நம்பிக்கை கூட்டணியின் அமைப்பு முறைக்கு ஒரு சான்றாக அமையும். அதோடு மலாய் – சமயம் என்ற இனவாத அரசியல் கூட்டுக்கு வேட்டு வைக்கும்.
தோல்வி என்பது பல்லின அரசியலுக்கு கிடைத்த தோல்வியாக அமையும். அப்படி நடந்தால் அது ஓர் ஆபத்தான பின்னடைவாகும்.