மக்களவை வர நோ-வுக்குத் தடை; பிஎன், பாஸ் வெளிநடப்பு

மக்களவைத் துணைத் தலைவர் ங்கா கொர் மிங், தம்மை இகழ்ந்துரைத்த நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்) மூன்று நாள் மக்களவைக்கு வரக்கூடாது என இன்று தடை விதித்தார்.

“தஞ்சோங் காராங் வேண்டுமென்றே மக்களவையை அவமதித்துள்ளார், அவைத் தலைவரின் அதிகாரத்தை மதிக்கவில்லை, அவைத் தலைவர் அந்த இடத்தில் இருக்கத் தகுதியற்றவர் என்றவர் கூறியது அவைத் தலைவரை அப்பட்டமாக அவமதிப்பதாகும்.

“எனவே, தஞ்சோங் காராங் மூன்று நாள்களுக்கு மக்களவைக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கிறேன்”, என ங்கா கூறினார்.

ங்கா பேராக்கில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது, அம்னோ-பாஸ் ஆட்சிக்கு வந்தால் மலேசியா தாலிபான் அரசாக மாறிவிடும் என்று கூறினாராம். நேற்று அவையில் அதைக் குறிப்பிட்டுப் பேசிய நோ, அவை துணைத் தலைவர் பதவிக்கு ங்கா தகுதியற்றவர் என்று இகழ்ந்துரைத்தார்.

ங்கா தடை விதிப்பதாக அறிவித்ததும் முகம்மட் சைட்(பிஎன் -கோலா குராவ்) அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தற்காத்துக்கொள்ள நோ அவையில் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நோ விளக்கமளிக்கவும் தான் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார். ங்கா அதற்கு இணங்கவில்லை.

இஸ்மாயில் அதன் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். மற்ற பிஎன், பாஸ் எம்பிகளும் அவரைத் தொடர்ந்தனர்.